என்னுடைய படைப்புலகம்
குடும்பம் சார்ந்தது. இதுவரை வெளிவந்த எனது எல்லா சிறுகதைகளும் குடும்பத்தை
அடிப்படையாகக் கொண்டவையே. சிறுகதை எழுதத் தொடங்கிய புதிதில் சொன்னதையே இப்போதும்
சொல்கிறேன். குடும்பத்தை தாண்டிய கதைகள் எனக்கு தெரியாது.
இன்னும் குடும்பத்தில் பெண்களிடமிருந்து சொல்ல வேண்டிய செய்திகள் ஏரளமாய் அள்ள அள்ள
குறையாத அமுத சுரபியைப் போல பெருகிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய கதைகளில் மிக
நுட்பமான சொல்லப்பட வேண்டிய சங்கதிகள் நிறைய உள்ளன.
கூட்டுக்குடும்ப அமைப்பு
சிதறி தனிக் குடும்ப அமைப்பில் புது சிக்கல்கள் மிகச் சாதராண விஷயங்களுக்காக உருவாகி
வருகின்றன. முடிச்சுகள் அவிழ்க்க முடியாமல் அல்லது முயலாமல் இருக்கின்றன.
இவ்விசயத்தை என் கதைகளில் பயன்படுத்திக் கொள்கிறேன்.
கடுகை பலூனாக ஊத
முயற்சிப்பதும் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுமாக குடும்ப சிக்கல்கள் உள்ளன.
அலட்சியம் செய்து போகும் விஷயங்கள் பெரிதாகின்றன. லட்சியம் செய்து குழப்பிக்
கொள்ளும் பல விசயங்கள் பின்னர் காணாமல் போய்விடுகின்றன.
பெண்களுக்கு பல பிரச்சனைகள்
உள்ளன. இவற்றை எளிமைப்படுத்தி என் கதைகளுக்கு அமைத்து கொள்கிறேன். நான் தீர்வாளன்
அல்ல. என் சிறுகதைகளும் தீர்வுகள் அல்ல. ஆனால் சிக்கல்களை மாற்றி பார்க்கிற கோணம்
என் சிறுகதைகளில் காணப்படும். அவை சிக்கலை செரித்து விடும் என்ற நம்பிக்கையும்
எனக்குள் வளர்கிறது.
மாயாஜால வித்தைகளும், சித்து
விளையாட்டுக்களும் என் கதைகளில் இடம் பெறுவதில்லை. பக்கத்தில் ஓடும் காவிரியைப் போல
என் சிறுகதைகள் தெளிவானவை. என் சிறுகதைகளின் பாத்திரங்கள் கோபப்படும் போது நானும்
கோபப்படுகிறேன். அழும் போது நானும் அழுகிறேன். சிரிக்கும் போது நானும் சிரிக்கிறேன்.
ஒவ்வொரு கதையை எழுதும்
போதும் என்னுடைய கவனமும், பொறுப்பும் கூடுகிறதாகவே உணர்கிறேன்.
(இனிது
இனிது என்ற இதழிலிருந்து)