அசுரன் என்று பெயரைக்
கொண்டிருந்தாலும் சன்னமான குரல், மெலிந்த தேகம், தீர்க்கமான கண்களைக் கொண்ட அவர்
தி. ஆனந்த ராம்குமார் சுற்றுச்சூழல் போராளி. மனித உரிமை ஆர்வலர்.
கன்னியாக்குமரி மாவட்டம், ஆதளவிளையைச் சேர்ந்த அசுரன் படித்தது கணினி பட்டயம்.
படிக்கும் காலத்தில் இருந்தே அவருக்குத் தமிழ்உணர்வு அதிகம். இளமைக்காலத்தில் அவர்
நடத்திய 'தீ வெட்டி'யைச் சிற்றிதழ் வாசகர்கள் நன்கு அறிவர்.
பல்வேறு பரிமாணங்களில் சுற்றுச்சூழல் அக்கறையின் அவசியத்தை வலியுறுத்திப்
பேசியவர்களுள் அசுரன் முக்கியமானவர். பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியனுடன் இணைந்து
பல்வேறு பணிகள் புரிந்துள்ளார்.
பாமயன் என்ற பெயரில் எழுதும் சுற்றுச்சூழல் எழுத்தாளரான மு.பாலசுப்ரமணியன்
அறிமுகத்திற்கு பின் 'புதிய கல்வி'யில் அசுரன் இணைந்தார். 'சிட்டு'
என்ற அவரது புனைபெயர் ஆசிரியர் குழுவில் முதலில் இடம் பெற்றது. பின்னர் அசுரனுக்கு
இணை ஆசிரியர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. சொற்பமான தொகையை ஊதியமாகப் பெற்று கொண்டு
சமூக அக்கறை காரணமாக இந்தப் பணியில் அவர் செயல்பட்டார்.
மண்ணாங்கட்டி என்ற பெயரில் சாதாரண மக்களின் பார்வையில் இருந்து சமூகப் பிரச்சனைகளை
புதிய கல்வியில் அலசியுள்ளார். அச்சில் மட்டுமின்றி, இணையதளத்தில் புதிய கல்வி
வெளிவரக் காரணமாக இருந்தார்.
'நியு எட் பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்துக்காக நியாய வணிகம், தண்ணீர் தொடர்பான
முக்கிய புத்தகங்களை உருவாக்கினார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கி சேதுசமுத்திர திட்டம், டாடா டைட்டானியம் என
மக்களைப் பாதித்த சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து மனித உரிமை குறித்த
அக்கறையுடன் பேசினார்.
நண்பர்களுடன் இணைந்த அனலி என்ற பத்திரிக்கை நடத்தினார். அப்போது தான் சிறுநீரகப்
பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். அப்போதும் கூட சமுக பிரச்சனைகளுக்காக போராடினார்.
அவரால் தொடங்கப்பட்ட 'புதிய தென்றல்' இதழ் தென் தமிழகத்தில் இருந்து வரும்
இதழ்களில் மருத்துவத்தில் கவனம் செலுத்தப்பட்ட இதழாகும்.முந்திரி உட்பட பல்வேறு
தாவரங்கள் பற்றித் தென்றலில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக படுக்கையில் இருந்த அசுரன் சிறுநீரக பிரச்சனையின்
காரணமாக திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
சொல்லுங்க தோழா... சொல்லுங்க என்ற சிநேகபாவத்தோடு பேசும் அசுரனின் குரல் இனி
மேல் ஒலிக்காது என்றாலும் அவருடைய நினைவு என்றுமே தன் நெஞ்சை விட்டு நீங்காது.
(கவிக்காவிரி இதழ்)