அயல் சினிமா: ஆப்பிரிக்காவின் துண்டு வளையல்கள்
 

சுப்ரபாரதிமணியன்
வீட்டு முற்றத்தில் சாயம் தோய்த்த துணிகளைப் பெண்கள் காயப்போடுகிறார்கள். திருமண ஊர்வலம் ஒன்று கடந்து போகிறது. ஒரு பெண்மணி வாளியன்றைத் தூக்கிக்கொண்டு அவ்வப்போது கடந்து போகிறாள்.ஒரு குழந்தை தடுமாறித் தாயைத் தேடிக்கொண்டிருக்கிறது.

அவ்வப்போது தன்னை அலங்கரித்துக் கொள்ளும் பெண் முற்றத்தை அலச்சியமாகப் பார்த்துக் கடக்கிறாள். அந்த முற்றத்தில் ஒரு நீதிமன்றம் கூடியிருக்கிறது. இரண்டு தரப்பிலான வழக்கறிஞர்கள் அங்கு நீதிமன்றப்பணியில் இருக்கிறார்கள்.  உலக வங்கி, சர்வதேச நிதிநிறுவனங்களின் மேல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன சில வழக்கறிஞர்களால். ஆப்பிரிக்காவின் சுயத் தன்மையைப் பாழாக்கி அதை ஒரு நவகாலனிய நாடாக்குவதில் இந்த நிறுவனங்கள் நுணுக்கமாக எவ்வாறு செயல்படுகின்றன என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்த நிறுவனங்களின் சார்பாகவும் சில வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். புலம் பெயர்தல் ஆப்பிரிக்காவில் சாதாரணமாகிவிட்டது. சகாராவில் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. கல்வி, உடல்நலத்திற்கு நிறைய நிதிகள் அரசு கொடுத்தபின், எதற்கு வெளிநாடு போகிறாய் என்ற கேள்விகள்.

உலகமயமாக்கலின் நாகரிகம் உலகம் முழுக்கவும் பரவிக்கொண்டிருக்கிறது. ஒருவன் பாட்டு மூலம் தன் மனக்குறையை வெளிப்படுத்துகிறான். இன்னொருவன் விசாரணைக்கு வந்து நின்று பேச எதுவுமில்லாததாக மௌனமாகவே இருக்கிறான். அதீத மனிதத் தன்மையில் பல இடங்களில் நடப்பதாய்த் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. உயர்ந்தபட்ச தங்கம் கிடைக்கும் நாடு, ஆனால் யாரும் தங்கம் அணிவதில்லை. நீக்ரோக்கள் சோம்பேறிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

நீதிமன்றம் நடக்கும் முற்றத்தைத் தாண்டிச் சுற்றுச்சுவருக்கு வெளியே இந்த விவாதங்களைக் கேட்க மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சாவகாசமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மதப்பிரச்சாரம் நடக்கிறது, வசீகரமான வாதங்கள், மதங்கள் முக்கியம் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தினை நடத்த மதம் எதற்கு? இயற்கை எதற்கு? உற்பத்திப் பொருள் போதும்.

உடையின் பின்புற ஊக்கைப் போடச்சொல்லி ஒரு பெண், நீதிமன்றத்தில் இருப்பவனிடம் கேட்கிறாள். பொருளாதார மேம்பாடு யார்பொருட்டு என்ற விவாதம் கிளம்புகிறது. துருவ ஐஸ்கட்டிகள் உருகுகின்றன என்பதும் விவாதமாகிறது. எயிட்ஸ் வியாதிக்குக் கோடி கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. கடன் நாட்டைச் சீரழித்துவிட்டது. ஆப்பிரிக்கா அடிமை தேசமாகிக் கொண்டிருக்கிறது. உலக வங்கியின் மேல் குற்றம் சாட்டப்படுகிறது. அவர்கல் இல்லாவிட்டால் எல்லோரும் பிச்சைக்காரர்களாகி இருப்பார்கள் என்கிறது ஒரு குழு.

இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வது பிசாசிடம் வாழ்க்கையை ஒப்படைப்பது போன்றது. கடன்பிசாசிடம் நாடு திணருகிறது. இருப்புப் பாதை மூடப்படுவதால் தொடர்பற்றுப் போய்விட்ட ஒரு கிராமத்தைப் பற்றி ஒரு பெண் சொல்கிறாள். ஆப்பிரிக்காவில் திட்டமிடப்பட்டு இருப்புப் பாதைகள் அழிக்கப்படுவது மக்களை அந்நியமாக்குகிறது என்ற வேதனையை ஒரு பெண் பிரதானமாய்ப் பகிர்ந்து கொள்கிறாள். ஆப்பிரிக்காவின் வறுமை தேய்ந்த நிலை அலசப்பட்டு உலக வங்கி போன்றவை குற்றவாளிகளாக்கப்படுகின்றன. மாலி புறநகர் பகுதியின் ஒரு வீட்டு முற்றத்தில் நடக்கும் இந்த நீதிமன்றம் சாதாரண மக்களின் நடமாட்டங்களுக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்ட நாடகமாகிறது.

இவை ஆப்பிரிக்கத் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநராக அப்துல் ரஹ்மான் சிஸ்ஸாகோவின் சமீபத்திய `பமாகோ’ என்ற திரைப்படத்தில் இடம்பெறும் அம்சங்களாகும். திரைப்படத்தின் புதிய மொழியை அவர் படங்களில் காணலாம் என்பதற்கு அத்தாட்சியாக பமாகோ படம் வெளிப்பட்டிருக்கிறது. கதை சொல்லியின் தன்மையினூடே அவரின் அரசியல் கடமை குறித்த அக்கறையிலிருந்து அவர் விலகாமல் இருப்பதை அவரின் படங்கள் காட்டுகின்றன.

உலகமயமாக்கலின் விளைவுகளால் மரபுக்கும் புதுமைக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம். இவரின் சமீபத்திய படைப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. நவீன உலகத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் உபகரணங்களும் மனிதனின் ஆத்மாவைத் தொடாமல் விலகி நின்று வேடிக்கை பார்ப்பதை வெளிப்படுத்திய ஆப்பிரிக்க அரசியல் குறித்த விசயங்களைச் சொல்வதற்காக அவர் எடுக்கும் தளம் ஆப்பிரிக்கக் கிராமங்களாக இருக்கின்றன.

`பமாகோ’வில் `மெலே’ என்ற பாடகியின் கணவனுடனான முறிந்து போகிற தாம்பத்திய உறவைச் சொல்ல ஆரம்பிக்கிற படம் வெவ்வேறு தளங்களுக்குப் பட ரசிகனை இழுத்துச் செல்கிறது. ஆப்பிரிக்காவின் வறட்சியான கிராமப் புழுதியும் வெயிலும் வறுமையும் தரும் சித்திரங்களூடே கௌபாய் மற்றும் இந்தியர்களின் வீரதீர செயல்களின் விமர்சனமும் நீதிமன்ற அலசல் போலவே இன்னொரு தளத்தில் இப்படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் முரணான சமூகங்களை முன்னிறுத்துகிறார்.

பழங்குடி இனத்தின் கதை சொல்லும் மனத்தினனாக அவரின் படங்களில் சிஸ்ஸாகோ வெளிப்பட்டிருக்கிறார். நவீன தகவல் தொழில் நுட்ப உலகில் எவ்வித தொடர்புமற்று அந்நியமாகிப் போய் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கும் மனிதர்களைச் சிஸ்ஸாகோவின் படங்களில் பார்க்க முடிகிறது.

`எல்லாம் இழந்து போனதான உணர்வும் இறந்த காலமும் என்னைப் படம் எடுக்க வைத்தது. எல்லா சொத்துகளையும் இழந்திருப்பேன். பம்பரா என்ற என் மொழி தொலைந்து போயிருந்தது. குழைந்தைப் பருவ நண்பர்கள் இல்லை. எனவே என்னைச் சுற்றியிருப்பவர்களை, இருப்பவற்றை ஆழமாகக் கவனிக்கவும் கற்றுக்கொண்டேன்.

என் மனதில் ஆழப் பதிந்திருப்பவற்றை மீட்டெடுக்க நான் படம் எடுக்க வேண்டியிருந்தது. என் அம்மாவின் மூத்த மகனை அவனின் அல்ஜீரியத் தகப்பன் கட்டாயப்படுத்திப் பிரித்திருந்தது என்னை மிகவும் பாதித்தது. என் அம்மாவையும் அது மிகவும் பாதித்தது. அவனைப் பற்றி நிறைய பேசுவார்கள். இரண்டு தடவைதான் அவனை நான் சந்தித்திருக்கிறேன்.

ரஷ்யாவிற்குப் படமெடுக்கக் கற்பதற்காகச் சென்றபோது ஒருமுறை வந்தான். அவனை நான் மிகவும் நேசித்தேன். மிகுந்த அன்பினால் அவனைப் பற்றி என் அம்மா நிறைய பேசினாள். அவனை ஆதர்சமாகக் கொண்டேன். அவனைக் கதாநாயகனாக மனதில் கொண்டு நான் படமெடுக்கிறவனானேன்.

அதற்கு முன்னால் திரைப்படங்கள் என்னை நெகிழ வைத்ததில்லை. எனது மங்கலான நினைவுகளில் இரண்டு மூன்று சார்லி சாப்ளின் படங்கள் மட்டுமே இருந்தன. எனது குடும்பச்சூழல் பின்னணியையும் அரசியல் அக்கறையையும் என் படங்களில் வெளிப்பாட்டு வடிவமாக்கிக் கொண்டேன் என்கிறார் சிஸ்ஸாகோ.

ஆப்பிரிக்கச் சமூகத்தின் அரசியல் தீண்டாமையை இன்னொரு வடிவத்தில் சொல்லும் படம் `சராபினா’. பாடல்கள், நடனங்கள் மூலம் கதை சொல்லும் உத்தியை இப்படம் கையாண்டிருக்கிறது. அதுவும் மாணவர்களின் துள்ளல் மிகுந்த பாடல்களும் ஆட்டமும் இப்படத்தை வேறொரு நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இந்த உணர்வெழுச்சியின் மறுபுறமாய் அவர்களுக்கு நேர்கிற அரசியல் அனுபவங்கள் அவர்களைச் செயலற்றவர்களாக ஆக்குகின்றன. ஆனால் அந்தப் பாடல்களை அரசியல் அதிகாரம் அடக்கிவிட முடியாது. எல்லோர் வாய்களிலும் அவை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் என்பதை இப்படம் காட்டுகிறது.

1976ல் நடந்த அரசியல் கிளர்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றது நாடகமாகிப் பரவலானது. இது நாடகத்திலிருந்து திரைப்படமாகியிருப்பதால் நாடக வடிவத்திற்கு ஒத்திசைவான பாடல்களும் நடனங்களும் அதே வடிவமாகத் திரைப்படத்திலும் அமைந்துவிட்டிருக்கிறது. சரபினாவிற்குப் பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அவளின் கனவை அடிக்கடி நெல்சன் மண்டேலாவின் படத்திற்கு முன் நின்று அவரோடு பேசுகிற இயல்பில் பகிர்ந்து கொள்கிறாள். அவளுக்கு ஆதர்சமாக இருப்பவள் கோல்டுபெர்க் என்ற சரித்திரம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியை.

மறுக்கப்பட்ட நீதியையும் மீட்டெடுக்கப்பட வேண்டிய மனித உரிமைகளைப் பற்றியும் வகுப்பில் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். சரித்திரம் கற்பிக்கும் சாக்கில் பொதுவுடைமை, புரட்சி பற்றிப் போதிக்கிறாள் என்ற குற்றச்சாட்டும் கண்காணிப்பும் அவள் மீது உண்டு.

காவல்துறை அவளது வகுப்பை நோட்டமிடுவதும் அவள் வகுப்பெடுக்கும் போது கூர்ந்து கவனிப்பதும் சாதாரணம். சரபினாவின் வகுப்புத் தோழியருத்தி அரசியல் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடுவதும் அவளது வகுப்பைப் பாதிக்கிறது.ஆப்பிரிக்கச் சமூக எழுச்சிக்கான மாணவர்களின் எண்ணமாய் அது விரிகிறது. பள்ளியில் காவல்துறையின் அத்துமீறலும் அதை எதிர்த்த மாணவர்களின் போராட்டங்களும் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்ந்த கலவரங்களுக்கும் இட்டுச் செல்கிறது.

சரபினாவும் அவளது வகுப்பினரும் மிகவும் மோசமாகச் சிறைச் சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள். மாணவர்களின் எழுச்சி சிதைக்கப்படுகிறது. மாணவர்கள் உயிரற்ற பிணங்களாய்ச் சிறையிலிருந்து வெளிவருகிறார்கள். தங்கள் வகுப்பினைத் தேடுகிறார்கள். ஜோகனஸ்பர்க்கில் ஒரு வெள்ளைகாரன் வீட்டில் வேலை செய்யும் சரபினாவின் அம்மா அவளுக்கு ஆறுதலாக அமைகிறாள். ஒடுக்கப்பட்ட மக்களுடைய போராட்டங்களின் விதைகளை மனதில் ஆழமாகப் பதிக்கிறார்கள். மாணவர்களின் எழுச்சியும் போராட்டங்களும் வெளிப்படுத்தும் தீவிரத்தைப் படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆழமாக்குகின்றன.

பாடல்களும் அதனூடான ஆடல்களும் மாணவர்கள் போராட்டங்களை உணர்வுபூர்வமிக்கதாக ஆக்குவதாய் அமைக்கப்பட்டிருப்பதில் மாணவ சமூக எழுச்சியின் சுயம் வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு உட்பட்ட பல மாணவர்களின் போராட்டங்களை இப்படச் சூழலில் வைத்துப் பார்க்கலாம். இது போன்ற படங்கள் பார்க்கும் தறுவாயில் மாணவர்களுக்கு அவை அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வை தூண்டிச் செயல்பட வைக்கும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களின் சக்தியும் போராட்ட உணர்வும் தட்டி எழுப்பப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தை இப்படம் உணரச்செய்கிறது. பாடல், நடனம் சார்ந்த கதை சொல்லும் வழக்கமான பாணி தகர்ந்து, திரைப்படம் பார்ப்பதை உணர்வெழுச்சி கொண்டதாக்குகிறது.

ஆப்பிரிக்கச் சமூகம் பற்றிய பல வண்ண எதார்த்தத்தை வெளிப்படுத்தும் இந்தத் துண்டு வளையல்கள் ஒரு கோணத்தில் கலைடாஸ்கோப்பின் பல வர்ண ஜாலத்தை வெளிப்படுத்துபவை. கறுப்புச் சமூக மக்களிடம் மிஞ்சியிருக்கும் புன்னகையையும் வெளிப்படுத்துபவை.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o பழந்தமிழரின் இசைக்கருவிகள்
o அயல் சினிமா: ஆப்பிரிக்காவின் துண்டு வளையல்கள்
o சிறுகதை: பறை
o செம்மொழியை முறையாகக் காப்போம்
o தண்ணீர் தேசம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies