தமிழ் கூறும் நல்லுலகில்
வண்ணங்களால் நிரப்பப்பட்டு பரபரப்பான சொல்லாடல்களைச் சுமந்த அட்டைகளுடனும்
வசீகரிக்கக்கூடிய புகைப்படங்களுடனும் ஓவியங்களுடனும் பிரபல நிறுவனங்களின்
விளம்பரங்களை அட்டையின் உள் பக்கங்களிலும் பின் அட்டையிலும் சுமந்து புகழிடத்
தமிழர்களின் அளவற்ற நன்கொடையாலும் வெளிவருகின்ற இதழ்கள்
தான் வெகுஜன ஊடகங்களால் சிறுபத்திரிக்கைகள் என்று சுட்டிக் காட்டப்படுகின்றன.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்காக தங்களை பிரபலபடுத்திக் கொள்வதற்காக நடத்தும்
பத்திரிகைகளின் தன்மையைக் கொண்டது பிரபலமான (அ) சர்ச்சைக்கரிய படைப்பாளிகளால்
நடத்தப்படும் இவ்விதழ்கள்.
இவ்விதழ்களை ஓர் ஏழை வாசகன் வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை இருக்கிறது. வெகுஜன
இதழ்களின் விலையை விட இரண்டு முன்று மடங்க அதிகம், பெரும்பாலான இதழ்கள் இழப்பீடு
இல்லாமல் நடத்தப்படுகின்றன, இன்னும் சில இதழ்கள் வணிக இதழ்களுக்குப் போட்டியாக
இலாபங்களை ஈட்டிக் கொண்டிருக்கின்றன, அவ்விதழ்களை சிறுபத்திரிக்கைகள் என்று சொல்வது
வெட்கக்கேடு.
இவ்விதழ்களின் சராசரி வாசகன் தனக்கான படைப்புகளைத் தேர்வு செய்வது என்பது இயலாத
காரியம். இதழ் ஆசிரியரின் படைப்புகளும் அவரை ஆராதிப்பவர்களின் படைப்புகளும்
அரசியல்வாதிகள் கொடுக்கும் அவதூறு வழக்குகளைப் போல் அவதூறு கட்டுரைகளும் நிறைய
பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன, இவ்வாறான இதழ்கள் எல்லாம் சிறு பத்திரிக்கைகள் அல்ல.
தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்தெல்லாம் அங்காடிகளிலும் ஓட்டல்களிலும்
பணிபுரிபவர்கள் கூலித்தொழிலாளர்கள், இப்படியானவர்கள் எந்த சுயநலமுமின்றித் தங்கள்
சொற்ப வருமானத்தின் பெரும்பகுதியைச சக மனிதனின் பிரச்சனைகளை வெளி உலகுக்க படைப்புகள்
முலம் தெரியப்படுத்தி அதன்முலம் அதற்கொரு தீர்வு காண்பதற்கும், சக மனிதனுள்
வீற்றிருக்கின்ற படைப்பாளியை செதுக்குவதற்கும், தம் மண்ணையும், தம் மண்ணில் புதைந்து
கிடக்கும் அரிய பல கருத்துகளையும், கலைகளையும், வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்துவதற்காகவும் அவர்கள் வெளியிடும் இதழ்களுக்காகச் செலவிடுகிறார்கள்
இப்படி வெளிவருகின்ற இதழ்கள் தான் சிறுபத்திரிக்கைகள் என்ற பெயருக்கு
தகுதியானவைகளாகும். இவ்விதழ்கள் குறைந்த பக்கங்களில் குறைந்த எண்ணிக்கையில்
வெளியிடப்படுகின்றன. தற்போது தமிழகத்திலிருந்தும் புதுச்சேரி மற்றும்
மும்பையிலிருந்தும் சுமார் 300 இதழ்களுக்கும் மேல் வெளிவருகின்றன.
அவைகள் இலக்கிய இதழ்களாகவும், மொழிப்பற்று, இன உணர்வு, நாட்டுப்பற்று ஆகியவற்றை
வலியுறுத்தி உரிமைக்குரல் கொடுக்கும் இதழ்களாகவும் திகழ்கின்றன. சமுக உணர்வு, தன்
முன்னேற்றம், உழைக்கத் தூண்டுதல் போன்றவற்றை வலியுறுத்தும் இதழ்களாகவும், கனமான
சிந்தனைகள், ஆழ்ந்த விஷயங்கள், சர்ச்சைகள் என்பனவற்றைத் தாங்கி உயர்ந்த
செயல்களுக்கான வித்தாக விளங்குகின்றன.
இலக்கியச் சிறகு, இனிய நந்தவனம், மதுமலர், தச்சன், கல்வெட்டு பேசுகிறது, சிகரம்,
புன்னகை, நாளைவிடியும், சோலைக்குயில், சௌந்தரசுகன், மகாகவி, முங்காரி, இப்படிக்கு,
தாழம்பூ, பயணம், தமிழர் முழக்கம் ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளிவந்து இயங்கி
வருகின்றன. கவிதை, இலக்கிய, பல்சுவை இதழ்களாகவும் வெளிவருகின்ற இவ்விதழ்கள் பருவ
இதழ்களாகவும் எண்வழி இதழ்களாகவும் இன்றைய சுழலில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவ்விதழ்களின் ஆயுள் கெட்டியாக உள்ளன. சில இதழ்கள் அவ்வப்போது வெளிவந்து தன்
இருப்பைக் காட்டுகின்றன. இதற்கான காரணம் பொருளாதாரம்.
இப்படிப்பட்ட இதழ்களை அச்சாகும் எண்ணிக¬கையை வைத்து சிறு பத்திரிக்கைகள் என்று
சொல்லலாமே தவிர கருத்தாக்கங்களின் அடர்த்தியை வைத்து சிறு பத்திரிக்கைகள் என்று
அவைகளைச் சொல்ல முடியாது. இலட்சக்கணக்கில் விற்றுத் தீரும் ஆடம்பரப் பத்திரிகைகள்
செய்யாத இலக்கியச் செழிப்பை, படைப்பாளர் பட்டறையை சிறு பத்திரிக்கைகளே உருவாக்கி
வளர்த்தெடுக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
அத்தகைய சிறு பத்திரிகைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் வெளியாகும் பகுதி
சாளரம்.