சிறுகதை: பறை
 

ஆங்கரை பைரவி

அந்த கூரை வீடு எங்கும் ஈரம் கலந்த நசநசப்பு இருந்தது. ஆங்காங்கே கூரை ஒழுகும் இடங்களுக்கு நேராய் சின்னச்சின்னப் பாத்திரங்களை வைத்திருந்தாள் வெள்ளையம்மாள்.

இந்தத் தொடர் மழைக்கு ஊருக்குள் தெருவுக்கு ஒரு சாவு என்று விழுந்த வண்ணமாய் இருக்கிறது. கருப்புசாமிக்கு ஓய்வு ஒழிச்சலே இல்லை. மழை கொட்டும் சப்தம் ஒருபுறம் என்றால், சாவுக்கு தப்புக் கொட்டும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. முதல்நாள் ஒரு தெருவில் பெரிய காரியம் என்றால் மறுநாள் இன்னொரு தெருவில்.

கருப்புசாமிக்கு இந்த மழை ஒத்துக் கொள்ளவில்லை ஆஸ்துமாகாரன் வேறு. அடித்து அடித்து பெய்த மழை அவனுக்குள் கிடந்த ஆஸ்துமாவைத் தட்டி எழுப்பிவிட்டு விட்டது. இருமிக் கொண்டே ஒரு மூலையில் கிடக்கிறான். கசக்கி எறிந்த காகிதம் போல.
அடுப்படியில் ஈரவிறகோடு போராடிக் கொண்டிருக்கிறாள்.
வரவர கண்பார்வை மங்கலாகிக் கொண்டே வருகிறது. அடுப்பு ஊதி ஊதியே கண்ணில் கோளாறு ஏற்பட்டு விட்டது.

இலவசக் கண்சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவளுக்கும் ஆசைதான். செய்துக் கொண்டு விட்டால் இரண்டு மூன்று மாதங்களுக்கு குனிந்து நிமிர்ந்து எந்த வேலையும் செய்யக்கூடாது முக்கியமாக அடுப்படி பக்கம் போகக்கூடாது போகாமல் இருந்தால் மகனுக்கும், மகளுக்கும் புருஷனுக்கும் எப்படிப் பொங்கிப் போடுவது?

வறுமையும், வேதனையும் வீடு முழுவதும் நிறைந்து இருந்தது. எல்லாவற்றையையும் சுத்தமாய்ப் பெருக்கி வெளியே போடுவான் என்று மகனை நம்பி இருக்கிறாள். மகனின் பெயர் கார்த்திகேயன். கல்லூயில் பி.ஏ. பொருளாதாரம் படிக்கிறான். இப்போது மூன்றாவது ஆண்டு இந்த வருடத்தோடு படிப்பு முடிகிறது. நாளையில் இருந்து தேர்வு ஆரம்பம். மூன்றாம் வருடம் கவனமாய்ப் படிக்க வேண்டும்.

இப்போதுகூட திண்ணையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். திண்ணையும் மழைக்கு ஈரம் கோத்து இருக்கிறது. இவன் படிப்புக்காக வட்டிக்குக் கடன் கொடுத்தவர்களில் யாரேனும் ஒருவன் வந்து கோபத்தில் எட்டி உதைத்தால் அவ்வளவுதான்... திண்ணை அப்படியே இடிந்துவிடும். இல்லையென்றால் திண்ணையே தெருவுக்கு நகர்ந்துவிடும். அத்தனை ஈரத்துடன் கிடக்கிறது.

இந்த மண் வீடு கூட இப்போதைக்கு இவன் படிப்பிற்கான கடனில் இருக்கிறது. ஊர்ப்பண்ணையாரிடம்தான் அடமானம் இருக்கிறது. கடன் கொடுத்த காரணத்தை வைத்துக் கொண்டே பலநாட்கள் கூலி தராமல் வேலையை மட்டும் வாங்கிக் கொள்வார்.
கொஞ்சமும் முரண்டு பிடித்தால் கடனைக்கேட்டு நெருக்குவார். வட்டிக்கு ஒரு வட்டி போடுவார். இந்த வம்பு எதற்கு? உடல் உழைப்புதானே என்று எல்லாக் கசப்புகளையும் மாத்திரையாய் உள்ளேயே விழுங்கி இருக்கிறான் கார்த்திகேயன்.

வெளியே கொட்டும் மழையைப் பார்த்தபடி நாளைய தேர்வுக்குப் படித்துக் கொண்டு இருக்கிறான். அம்மா அடுப்படியில் புகைந்து கொண்டு இருக்கிறாள். அப்பாவின் இருமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டின் சூழ்நிலை புரியாமல் கண்ணம்மா தப்பை எடுத்துத் தட்டிக் கொண்டிருந்தாள்.

சாவுக்கொட்டி தாளத்தைப் பிசகாமல் தட்டினாள். கார்த்திகேயனுக்கு கோபம் வந்து விட்டது. எழுந்து உள்ளே வந்தான்.
ஏய்..! சனியனே...! இப்ப இங்கே யாரு செத்துப் போயிட்டாங்கன்னு சாவுக்கெட்டு கொட்டுறே? நிறுத்துடு முதல்ல..
கோபத்தில் மூக்கு விடைத்தது கார்த்திகேயனுக்கு..

கண்ணம்மா கண்ணம்மா என்று பிரியமாய் இருக்கும் அண்ணன் கத்தவும் அவளின் முகம் தொட்டாச்சிணுங்கியாய் மாறிப் போனது. கார்த்திகேயனுக்கு ஒரு வயது இளையவள். வாயாடி, படிப்புத்தான் ஏறவில்லை.. இரண்டாம் வகுப்போடு சரி, அம்மாவோடு களை எடுக்க நாத்து பறிக்கப் போவாள். இவளுடைய சம்பாத்தியமும் கார்த்திகேயனுக்கு ஒரு பக்கபலம்.

ஏன்... நான் தப்பு கொட்டினா.. என்ன? எகிறலில் கோபம் தெரிந்தது.

பொம்பளை எல்லாம் தப்படிக்கக் கூடாதுடி... அம்மா மிரட்டினாள்.

யார் சொன்ன உனக்கு? சொன்ன ஆளைக்கொண்டு வந்து முன்னாடி நிறுத்து, பளார்னு அறையறேன். பொம்பளை கார் ஓட்டலாம். ஆனா, தப்புக்கக் கூடாதுன்னா எந்த ஊரு நியாயம்? அண்ணனுக்குப் பொறாமை நான் நல்ல அடிக்கிறேன்னு வெவ்வெவ்வே... பழிப்புக் காட்டினாள்.

அவள் பழிப்புக் காட்டியவிதம் கண்டு வீடு சித்தது. அந்த நேரத்தில் வீடு முழுவதும் ஒரு மலர்ச்சி படர்ந்தது. கருப்புசாமியும் சிரித்தான். சிரிப்பைத் தொடர்ந்து இருமல் தொடர்ந்தது. அந்த இருமல் கார்த்திகேயனுக்கு மிகுந்து கவலையைக் கொடுத்தது.

கருப்புசாமியை நெருங்கினான். அவனது மார்பை நீவிவிட கை வைத்தான். உடம்பு அனலாய்க் கொதித்தது. ஒரு மாத்திரை போட்டால் சயாகுமா? என்று நினைத்தவன் தனது சட்டைப் பையைப் பார்த்தான். புந்துக் கொண்டவளாய் தனது சேலை முந்தானையில் முடிந்து வைத்திருப்பது ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினாள் அம்மா. வாங்கிக் கொண்டான்.

நான் போய் செட்டியார் கடையில் மாத்திரை வாங்கிட்டு வரேம்மா... குடையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான். அங்கே யாரோ வந்து நிற்பது தெந்தது.

வாங்கண்ணே... என்ன இந்த நேரத்துல? இவன் அழைப்பை வந்தவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

எங்கேடா உங்க அப்பன்?

உடம்பு சயில்ல.. உள்ளாற படுத்து இருக்காரு..

கூப்புடு அவனை..!

யப்போப்வ்.. உன்னையக் கூப்புடுறாங்க. இங்க வா..! தட்டுத் தடுமாறி எழுந்து வந்தான் கருப்பசாமி. இருமல் நிற்காமல் தொடர்ந்தது மார்பை நீவிவிட்டுக் கொண்டான்.

யாரது..? குரல் தடுமாறியது. செருமிக் கொண்டான்.

நான்தண்டா மாணிக்கம் பண்ணையாரு. அம்மா செத்துப் போச்சு காலையிலே மாரிமுத்துவோடு வந்திடு.. அவனுக்கும் சொல்லிட்டேன் இந்தா...

வெற்றிலை பாக்கில் ஒண்ணே கால் ரூபாய் வைத்து இடதுகையால் நீட்டினான். இறங்கி வந்து இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டான் கருப்பசாமி.

மறுநாள்:

ஒரு பக்கம் விடியக்கூட இல்லை. அரை போதையில் வந்து நின்றான் மாரிமுத்து. கருப்பசாமியுடன் தொழில் செய்கிறான். நல்ல அனுபவசாலி. வயசாளி, கருப்புசாமிக்கு உதவியாய் இருப்பான். தப்பு அடிப்பதில் சற்று சுணக்கம் இருக்கும். அதற்கு வயோதிகமும் ஒரு காரணம். ஆள் இல்லாத ஊKல் இவனுக்கும் வேலை இருக்கவே செய்தது.

ஏய் கருப்பசாமி! இன்னும் வூட்டுக்குள்ளே என்னடா பண்றே..? நேரமாச்சுடா வா.. மாமுத்து குரல் கேட்டு வெள்ளையம்மாள் வெளியே ஓடி வந்தாள். திண்ணையில் கார்த்திகேயன் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தான்.

மாமா... ராத்தி பூரா பொட்டுத் துக்கமில்ல. உங்க மகனுக்கு இப்பத்தான் செத்த கண் அசந்துருக்கு. உடம்பு வேற அனலா கொதிக்குது என்னா பண்றது..? கவலை குரலில் இழையோடியது. கார்த்திகேயனைப் பார்த்தாள். அவனுக்குப் புரிந்து போயிற்று.

அம்மா... எனக்கு இன்னிக்கு பரீட்சை இருக்கும்மா. இது மூணாவது வருஷம் இதை விட்டேன்னா மூணு வருஷப் படிப்பு வீணாப் போயிடும்மா... பரிதாபமாய் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

இல்லடா தம்பி.. நீ போய்க் கொஞ்சநேரம் தப்படிச்சிக்கிட்டு இரு. ஒரு எட்டுமணி வாக்குல உங்கப்பனை எழுப்பி ஒரு மாத்திரை போட்டு அனுப்பி வைக்கிறேன்.

புத்தகத்தை மூடி வைத்தான். தப்பை எடுத்துக் கொண்ட மாரிமுத்துவோடு நடக்க ஆரம்பித்தான். அப்பாவின் தோள் துண்டால் தலையில் முண்டாசு கடடியிருந்தான் நடையில் ஒரு கோபம் இருந்தது.

பண்ணையார் வீடு நேரமாகிக் கொண்டிருந்தது. பல்கூடத் தேய்க்காமல் வந்த கார்த்திகேயனுக்குப் பசிக்க ஆரம்பித்தது. கூண்டில் சிக்கிய பறவையாய் தவித்தான்.

கடவுளே..! என்னோட படிப்பு அம்புட்டுதானா? எங்க தலையெழுத்து மாறாதா? இன்னிக்கிப் போகலேன்னா வாழ்க்கையே பாழாயப் போயிடுமோ!. அப்பாவை இன்னும் காணோம். உடம்புக்கு ரொம்ப முடியாமப் போயிடுச்சோ? கடவுளே..! நான் என்னா செய்வேன்..?

தப்படித்துக் கொண்டே உள்ளூரக் கலங்கினாள். அடிக்கடி தெருவையே திரும்பிப் பார்த்தான். முகமே இருண்டு போய்க்கிடந்தது. மனது முழுவதும் கவலை சுமந்தான். கண்கள் கலங்கின. சடக்கென்று வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். துடைத்துக் கொண்டதை மாரிமுத்து பார்த்துவிட்டான்.

ஏலேய் பேராண்டி! நீ ஏன் அழுவறே..? என்ன ஆச்சு உனக்கு..? பதற்றம் கலந்த குரலில் கேட்டதுதான் தாமதம். குரலில் பிசிறு தட்ட ஆரம்பித்தது கார்த்திகேயனுக்கு.

இல்ல தாத்தா காலேஜ் போகணும்... பரீட்சைக்கு நேரமாச்சு.. அப்பாவையும் இன்னும் காணோம்.. இன்னிக்குப் போகலேன்னா... அவ்வளவுதான் தாத்தா...

டேய் என்னடா தப்படிக்கயில பேச்சு வேண்டிக்கிடக்கு. அடியில சொரத்தே இல்ல. தப்பை நல்லாக் காய்ச்சி அடிங்கடா..
காரியத்துக்கு வந்த கூட்டத்தில் ஒருவன் கத்தினான். அடிப்பதை நிறுத்திவிட்டு பக்கத்தில் கிடந்த வைக்கோலால் நெருப்பு உண்டாக்கினான் கார்த்திகேயன். அடித்த அடிக்கு கைவலித்தது. அப்பா இன்னும் வராத கவலையில் மனசு வலித்தது. தப்பை நெருப்பில் காட்டியபடி இந்த முறை தெருவப் பார்த்தான். தூரத்தில் கண்ணம்மா வந்து கொண்டிருந்தாள்.

***

ஒவியா,
கலை இலக்கிய இருமாத இதழ்.
4/93, 4வது தெரு,
கவியரசு கண்ணதாசன் நகர்,
கொடுங்கையூர், சென்னை.

 

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o பழந்தமிழரின் இசைக்கருவிகள்
o அயல் சினிமா: ஆப்பிரிக்காவின் துண்டு வளையல்கள்
o சிறுகதை: பறை
o செம்மொழியை முறையாகக் காப்போம்
o தண்ணீர் தேசம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies