ஒன்பது வருடங்களுக்கு
பின் மீண்டும் சொந்த மண்ணை மிதிப்பதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது.
குதிரை வண்டிகளும் மிதி ரிக்சாக்களும் நிறைந்திருந்த ரயில் நிலையத்தில் இப்போது
ஆட்டோக்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. என்.எஸ். கலைவாணர் வீதியில் நிறைந்திருந்த
குடிசைகளில் பல கட்டிடங்களாக உருமாறியிருந்தன.
மீன்பிடித் தொழில்
மட்டுமே பிரதானமாயிருந்த ஊரில் துணிக்கடை, மருந்துக்கடை போல தெருக்கொரு டாஸ்மார்க்
கடையின் போர்டுகளைப் பார்க்க முடிந்தது. சைக்கிள் குறைந்து ஸ்கூட்டரிலும், ஹீரோ
ஹோண்டாவிலும் பறந்தபடி இருந்தார்கள் இளைஞர்கள். சைக்கிளின் பின்பக்கம் கேன் கட்டி
வலம் வரும் பால்காரர்கள் எம்80ல் போய் கொண்டிருந்தார்கள்.
புராண புண்ணியதலமாக
மட்டுமே அறியப்பட்டிருந்த ஊர், முதல் முறையாக அறிவியல் பூர்வமாகவும் தன் பெயரைப்
பதிவு செய்து கொண்டது அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தான்.
கடைவீதியில் டீ குடிக்க
நின்ற போது சூடாக போட்டுக் கொண்டிருந்த சுழியத்தை எடுத்து தின்றேன். பழைய சுவை
மாறாமலிருந்தது. ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. கலர் டிவி,
ப்ரிஜ், மெத்தையுடன் கட்டில், பச்சை வண்ண தொலைபேசி. குளித்து சாப்பிட்டு விட்டு
வழக்கமாக நண்பர்கள் கூடும் லாலா மிட்டாய் கடைக்கு போகலாம் என்று கிளம்பினேன்.
மருதுபாண்டியர் சிலையைக் கடந்து நடந்து போய் கொண்டிருக்கும் போது எதிரில் வந்த
டேங்கர் லாரி ஒன்று மோதுவது போல் வந்து நின்றது.
"டே(ய்)... சுந்தரம்"
"பங்கா எப்படா வந்த?"
"நேத்திக்கு..."
"ஒரு போன் கூட பண்ணலியேடா
அதுசரி... இப்ப எங்கடா போற..."
"சும்மா அப்படியே
வந்தேன்டா"
"அப்ப சரி வண்டியில்
ஏறிக்கோ, ஓலைக்குடா வர போய்ட்டு வந்திடுவோம்" ஏறிக் கொண்டேன்.
ராமேஸ்வரத்தை சுற்றி
இருக்கும் பல மீனவ கிராமங்களில் ஓலைக்குடாவும் ஒன்று. ஊரின் வடகிழக்கு பகுதியில்
கடற்கரையை ஒட்டினாற் போலிருக்கும் கிராமம். முன்னூற்றுக்கும் குறையாத குடிசைகள். ஒரு
தொடக்கப் பள்ளி, சின்ன தேவாலயம், மினி தபால் நிலையம் மட்டுமே கொண்ட சிற்றூர்.
மருத்துவ வசதிகளுக்கு கிராம மக்கள் ராமேஸ்வரத்திற்கு தான் வருவார்கள்.
மருத்துவ தேவைகளுக்கு
மட்டுமின்றி அவர்கள் ராமேஸ்வரத்திற்கு வருவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அது
நல்ல தண்ணீருக்காக. நாடு பொன்விழா கண்ட பின்னும் கூட ஓலைக்குடா போல பல
கிராமங்களுக்கு குடிதண்ணீர் வசதி மட்டும் ஏனோ வாய்க்கவில்லை. பல வருடங்களாக மக்கள்
ஆறு கிலோ மீட்டர் நடந்து வந்து ஊருக்குள்ளிருந்து தான் குடிதண்ணீர் தூக்கி
செல்வார்கள். சில சமயங்களில் சைக்கிளின் கேரியரில் இரண்டு புறமும் குடம் கட்டி
செல்லும் பெண்களையும் பார்க்க முடியும். வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஓலைக்குடா போன்று பல கிராமங்கள் உள்ளன.
"ஏன்டா... இன்னுமா அங்ஙன
தண்ணீர்ப் பிரச்சனை தீரல?"
"ஆமான்டா வர்றவனுங்க
எல்லாம் இத முடிச்சிட்டு தான் மறுவேல பார்ப்பானுங்க போடா"
"ஏன்டா சலிச்சுக்கிற...
உனக்குத்தான் பணம் கெடைக்கமில்ல?"
"டே...எனக்கு வெறும்
சம்பளம் தான்டா... தண்ணி வித்து காசு பார்க்கிறவங்க வேற ஆளுங்கடா"
"ஒலகம் முழுக்க தண்ணி
விக்கிறாங்க. நம்ம ஊர்ல விக்கிறது புதுசு இல்லடா. ஆமா! ஓலக்குடா இன்னும் அப்படியேதா
இருக்கா"
"ம்ம்... நீ போனப்ப
இருந்த ஊரு இல்லடா ரொம்ப மாறிடுச்சி. ஊருக்குள்ளாற டெலிபோன் வசதியெல்லாம்
வந்திருச்சி. தார் ரோடு போட்டுடாய்ங்க ரெண்டு மூணு பெரிய ஸ்டோர்ஸ் எல்லாம்
வந்துடுச்சுடா"
"ஆனா குடிக்க தண்ணீர்
மட்டும் இன்னும் சொமக்குறாய்ங்கன்னு சொல்லு"
"அடப் போடா இவனே...!
தண்ணிய சொமக்குற காலமெல்லாம் போச்சு தேவைக்கு ஒரு போன். தண்ணி சப்ளைக்குன்னே
ஊருக்குள்ளாற ஏழு டேங்கர் ஓடுது"
எங்கள் பேச்சினிடையே
கிராமத்தில் நுழைந்துவிட்டோம். முதலில் இருந்த வீடுகளில் இருந்து குடத்துடன் பெண்கள்
காத்திருந்தார்கள். டேங்கர் லாரி நின்றதும் நாகசுந்தரம், கிளீனருடன் நானும் கீழே
இறங்கினேன்.
முதல் வீட்டிலிருந்து ஒரு
கட்டையானவர் வந்து டேங்கரின் பைப் அருகில் நின்று கொண்டு குடத்துக்கு இரண்டு ரூபாய்
வசூலித்து தண்ணீர் விடத் தொடங்கினார். அவர் தான் தண்ணீர் ஏற்பாடு செய்து தருபவராக
இருக்கலாம். டேங்கருக்கு மொத்தமாக பணம் கொடுத்து, கிராமத்தில் சில்லறையாக வசூலித்து
பணம் பண்ணும் சின்ன முதலாளி.
கிளீனரை மட்டும் விட்டு
விட்டு வண்டியின் முன்பக்கம் வந்தோம். சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை
நீட்டியபடியே நாகசுந்தரம் கேட்டான் "விட்டுட்டியா?"
"நான் விட்டுட்டேன். அது
தான் விட மாட்டேங்குது..." என்றபடி எடுத்து பற்ற வைத்தேன். சிரித்தான்.
இரண்டு இழுப்புக்கு பின்
எனக்கு கிறிஸ்டோபரின் நினைவு வந்தது. என் வயதுக்காரன். எங்களோடு ஒன்றாக திரிந்தவன்
கடலை நம்பி இருக்கும் மீனவ குடும்பத்துக்காரன். பள்ளிப்படிப்பை பாதியிலேயே
விட்டுவிட்டு கடலுக்கு போனவன்.
"மாப்ளே... கிறிஸ்டோபரைப்
பார்க்கலாமனு நெனக்கிறேன் வர்றியா?"
"இல்லடா வண்டிய ஓட்டணும்
நீ வேணா அவன் வீட்லேயே ஒக்கார்ந்து பேசிகிட்டிரு நா வண்டியோட வர்றேன்"
நடக்க ஆரம்பித்தேன்.
கிறிஸ்டோபரின் வீடு ஊரின் கடைசியில் இருந்தது. நான் ஊரை விட்டு போன சில மாதங்களிலேயே
மணவிழா பத்திரிக்கை அனுப்பி இருந்தான் வாழ்த்து தந்தி கூட அனுப்ப முடியவில்லை.
நடக்க நடக்க கிராமத்தில்
நிறைய மாற்றங்களை பார்க்க முடிந்தது. குடிசையாக இருந்த துவக்கப்பள்ளி கான்கிரீட்
கட்டிடமாக வளர்ந்திருந்தது. பல மாடி வீடுகள் கட்டப்பட்டிருந்தன. தேவாலயத்தின் மேல்
நியான் விளக்கில் சிலுவை செய்திருந்தார்கள்.
சர் சர்ரென டூவிலர்களில்
பறப்பவர்கள் அதிகமாக இருந்தார்கள். மாற்றங்கள் கொஞ்சம் தெரிந்தாலும் இன்னும்
தண்ணீருக்கு இவர்கள் படும் அவலம் நினைக்க என்னவோ போலிருந்தது. எல்லா வீட்டு
வாசலிலும் குடத்துடன் பெண்கள் காத்துக் கிடந்தார்கள்.
பல வீடுகள் தங்களை
மாற்றிக் கொண்ட போதிலும் கிறிஸ்டோபரின் வீட்டை அடையாளம் காண்பதில் சிரமமாக இல்லை.
பழைய குடிசை மாறாமல் அப்படியே இருந்தது. வேலி மட்டையை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தேன்.
"கிறிஸ்டோபா..."
"ஆரது...?"ஆண்குரல்
"வெயிலில் வர்றது!"
சிறிது நேரத்திற்கு பின்
வெற்றுடம்புடன் துண்டு மட்டும் கட்டியபடி வெளியில் வந்தார் கிறிஸ்டோபரின் அப்பா.
ஒன்பது வருடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார். கண்களை இடுக்கிக்
கொண்டு என்னைப் பார்த்தார்.
"ஆரப்பு அடையாளந்
தெரியலயே..."
"நாந்தாப்பா" என்னை
அடையாளப்படுத்திக் கொண்டதும் சட்டென உணர்ந்து கொண்டவராய்! வாப்பூ நல்லாருக்கியா ராசா
என்று கையைப் பற்றித் திண்ணையில் அமர சொன்னார்.
சிறது நேரம் பழக்கம்
பேசிக் கொண்டிருந்தோம். கிறிஸ்டோபர் கடலுக்குப் போயிருப்பதாகவும் அவன் மனைவி தண்ணீர்
பிடிக்க போயிருப்பதாகவும் சொன்னவர் சென்னீ என்று உள் நோக்கிக் குரல்
கொடுத்தார். ஐந்து வயதில் ஒரு சிறுமி ஓடி வந்தது.
"ஓடிப்போய் பால்ராசு
கடையில் சித்தப்பூக்கு ஒரு கலர் வாங்கியா" என அக்குழந்தையை விரட்டினார்...
"அய்யய்யோ... அதெல்லாம்
வேணாம்பா... சொம்புல தண்ணி கொடுங்க போதும்" என்றேன் நான்.
"ஒரு சொட்டு தண்ணி கூட
இல்லப்பு. இருந்ததுல சோத்துக்கு ஒல வச்சிருக்கா... மருமக எடுத்துட்டு வந்தாத் தான்
தண்ணியே நம்ம ஊருக்குள்ளார பெரிய கடையெல்லாம் வந்தாச்சுப்பூ ஏ ஓடு...!" என்று
ஜென்னியை முடுக்கிவிட அது ஓடிவிட்டது.
பல வருடங்கள் கழித்து
மணமான நண்பனை பார்க்க வெறுங்கையோடு வந்தது மனதை உறுத்தியது. பழக்கம் பேசிக்
கொண்டிருந்தபோதே குழந்தை ஜென்னி வந்து நின்றாள்.
அவள் கையில் வியர்த்து
வழிந்தபடி இருந்தது "லெஹர் பெப்ஸி" பாட்டில்.
(தச்சன் இதழிலிருந்து)