தெளிவு
 

முகவை.பெரிய பத்மநாபன்

வீடே சலனமற்று கிடந்தது. கிழக்கு சுவரின் மூலையில் கரையான் அணிவகுத்துக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு கரையான்கள் மட்டும் வரிசையை பின்பற்றாமல் நடந்தது ஆசிரியர் பேச்சை கேட்காத சில குறும்புகார மாணவர்களைப் போல. வர்ணமிட்டு பல வருடங்கள் இருக்கும் என சுவரே அறிவித்துக் கொண்டிருந்தது.

வீடு நான்கு பக்கமும் களிமண் சுவர் மேலே தென்னை தகடால் வேயப்பட்ட கூரை, மழை ஏதும் வந்து விட்டால் வீட்டுக்குள்ளேயே குளித்து விடலாம் என்ற அளவிற்கு ஆயிரம் கண்கள் முளைத்திருக்கும் தேவலோக இந்திரனை போல. ஆனால் வெயில் காலம் என்பதால் இப்பொழுது எந்த பாதகமும் இல்லை. இரவில் மின்விசிறி இல்லாமலே காற்று வரும். விளக்கின் ஒளியுடன் சந்திரனின் ஒளியும் கூடி வீடே பளிச்சிடும் என்ற சில நன்மைகளும் உண்டு.

வீட்டில் சில பாத்திரங்கள், துணிகள், மூன்று குழந்தைகள் இவைகளோடு காமாட்சியை விட்டு விட்டு செத்து போனான் செல்லையா.

காமாட்சி எத்தனையோ முறை அவனிடம் சொல்லியிருக்கிறாள் "யோவ்! தினமும் குடிக்காதய்யா... என்னமும் ஆய்டப்போவுது" என. ஆனால் அவன் கேட்டதாயில்லை. "அட சும்மா இரு புள்ள... மனுசன் கல்லு ஒடக்கிறது உனக்கென்ன தெரியும்?... சும்மா கொஞ்சமா உடம்பு வலிக்காக குடிக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் செய்யாது... நீ சாப்பாடப் போடு" என்பான் பதிலுக்கு.

செல்லையா தினமும் குடித்தாலும் வீட்டிற்கு எந்த குறையும் வைத்ததில்லை. தீபாவளியோ, பொங்கலோ, ஊரில் ஏதும் திருவிழாவோ... குழந்தைகள், மனைவிக்கென புதுத்துணி எடுத்து விடுவான். காமாட்சி புதுத்துணிகளை வாங்கி உடுத்தி கொண்டு நிற்கையில் ஜவுளி கடை மாடல் போல அவ்வளவு அம்சமாக இருப்பாள்.

கண்ணங்கரிய பெரிய விழிகள், முந்திரி பழ நாசி, வளவளவென கன்னம்... ஆண்களை வசீகரிக்கும் அத்தனை அழகும் கனகச்சிதம். இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களின் அழகை விட காமாட்சிக்கு இரண்டு மடங்கு கூடுதல் அழகு என்று தான் சொல்ல வேண்டும். மூன்று குழந்தைகளை பெற்று முப்பத்திரெண்டு வயதாகி இருந்தாலும் புதிதாய் பார்ப்பவர்கள் இருபத்திஐந்து, இருபத்தியாறு என்று தான் சொல்வார்கள்.

செல்லையாவின் அழகிற்கும் அப்படியன்றும் குறைச்சலில்லை. கிராப் முடி, காதை தொட்டு நிற்கிற கிருதா, ஆறு மணி நேரம் உடற்பயிற்சி செய்பவர்களை போல கட்டுமஸ்தான உடம்பு கிட்டதட்ட ராணுவ வீரன் போல் இருப்பான். காமாட்சியை விட மூன்று வயது அதிகம் அவனுக்கு. இருவருமே சரியான ஜோடிதான்.

குழந்தைகளும் அவர்களை போல் அழகு தான். மூத்தவள் பெண். ஊராட்சி ஒன்றிய பெண்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு, இளையவனில் ஒருவன் நான்காம் வகுப்பு, ஒருவன் மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர்.

இருபது நாட்களுக்கு முன்பு தான் அந்த சோகம் நடந்தேறியது. குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்கி வந்து காமாட்சியிடம் கொடுத்தவன் அப்படியே இரத்தவாந்தி எடுத்தபடி கீழே சரிந்தான். காமாட்சி துடிதுடித்துப் போய்விட்டாள். அவள் போட்ட சத்தத்தில் அக்கம், பக்கம் உள்ளவர்களெல்லாம் வந்து உதவி செய்ய, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதிக்கையில் இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிய வந்தது. எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. மறுநாள் மதியம் 12 மணி பொழுதில் சூரியன் சிரிக்கும் பொழுது, எல்லோரையும் அழ வைத்துவிட்டு இறந்து போனான்.

எல்லா காரியங்களும் செய்துவிட்டு சொந்த பந்தங்களெல்லாம் போய்விட்டன. இனி சாப்பாடிற்கும், குழந்தைகளின் செலவிற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இது வரைக்கும் எந்த வேலைக்கும் சென்றதில்லை. அவன் வீட்டைப் புதுப்பிக்க வைத்திருந்த பணமெல்லாம் ஒரே நாளில் செல்லையாவின் மருத்துவ செலவிற்குப் போய்விட்டது. வெறுமையாக உட்கார்ந்திருந்தாள் காமாட்சி. குழந்தைகள் பள்ளிக்குப் போயிருந்தன. வீடே சலனமற்றுக் கிடந்தது.

செல்லையா விட்டுபோய் இருபது நாட்களாகி விட்டது. இனியும் ஒன்றும் செய்யாமல் இருப்பதில் பயனில்லை. இவ்வளவு நாள் யாரிடமும் கைகட்டி நின்றதில்லை. பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் இனிமேலும் யாரிடமும் கைகட்டி நிற்க விருப்பமில்லை அவளுக்கு.

சொந்த தொழில் தான் சரியென மனதிற்கு பட்டது. பணத்திற்கு என்ன செய்வது? பணம், நகை எதுவுமே இல்லை, எப்படி தொழில் செய்வது? என யோசித்தவளுக்கு " சரி!...இதற்காவது அண்ணனிடம் கொஞ்சம் பணம் கடனாக வாங்கலாம்" என மனதில் பட்டது. இப்படி நினைத்தபடியே எழுந்தவளுக்கு சட்டென ஒரு சப்தம் அவள் மன ஓட்டத்தை நிறுத்தியது.

கேட்டு ரசித்த கணவனே போய்விட்டான், இனி கால் கொழுசு எதுக்கு? என அதை சுழற்றி எடுத்துக் கொணடு போய் சேட்டு கடையில்  வச்சிட்டு என்ன செய்றது? மீண்டும் அவளுக்குள் போராட்டம். இதுவா? அதுவா? கடைசியில் பழவியாபாரம் சரியெனபட்டது. சிறுமுதல் போதுமே அதற்கு.

மறுநாள் குழந்தைகளை பள்ளிக்கு கிளம்பச் சொல்லிவிட்டு, விடியற்காலையிலேயே சந்தைக்குப் போய் ஒரு பழக்கூடை வாங்கிக் கொண்டு அப்படியே அதில் கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு என நிரப்பிக் கொண்டாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். கூச்சமாயிருந்தது. எல்லா கண்களும் அவளையே பார்ப்பது போலிருந்தது. தன் நிலையை நினைத்து மனம் குமுறினாள். ஏதோ தைரியத்துல வாங்கிட்டோம், எப்படி விக்கப்போறோம்? உள் மனம் கலங்கடித்தது.

"சொந்தபந்தம் எதுவும் சொல்லுமோ? தன் பிள்ளைகளுடன் படிக்கும் பிள்ளைகள் தன் பிள்ளைகளை பழக்கூடக்காரி புள்ளனு! கேலி செய்யுங்களோ?!" இப்படியே ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் எட்டிப் பார்த்தன.

இனி யோசித்துப் பயனில்லை. கூச்சத்தைவிட்டு கூடையை தூக்கினாள். முன்பின் தெரியாதவர்கள், என்றோ வந்து போகிறவர்கள், அவர்களிடம் விற்கும் பொழுது தான் கூச்சம் அற்றுப் போகும். இரயில் நிலையத்தை நோக்கி நடந்தாள்.

"ஆப்பிளு, ஆரஞ்சு, கொய்யா..." என பலமுறை மனதிற்குள் பயிற்சி எடுத்துக் கொண்டாலும், உதட்டிற்கு ஓடிவர மறுத்தன வார்த்தைகள். பழங்களின் பெயர்களை முணுமுணுத்தபடி சென்றாள்.

"ஆப்பிளு...ஆரஞ்சு...கொய்யா..."

எட்டுமணி வைகை எக்ஸ்பிரஸ் வந்து நின்றது. அதில் எட்டாவது பெட்டியில் ஒருவனை அடித்து இழுத்து வந்தனர் சிலர், சுற்றிலும் கூட்டம். என்ன விசயமென்று கேட்டு தெரிந்தவர்களெல்லாம் திட்டினர். இவனுகளுக்கு இதே வேல தான், ஒருத்தன் நிம்மதியா போவமுடியுதா? திருட்டுப் பசங்க... என்றார் ஒரு பெரியவர்.

காமாட்சியும் வேடிக்கைப் பார்த்து நின்று கொண்டிருந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் இரயில்வே போலிஸ் வந்ததும் "ஏண்டா... உனக்கேன் இந்த வேல? இங்க பாரு இந்த பொண்ணலாம் பழக்கூடத் தூக்கி விக்கிற வயசா, நீங்க மட்டும் ஏண்டா இப்டி கேடு கெட்டு வாழ்றீங்க?" என்றார் கூட்டத்தில் நின்ற ஒருவர். போலிஸ் அவனை இழுத்துச் சென்றது.

சற்று நேரத்திற்குள் கூட்டம் கலைந்து இரயிலில் ஏறின. வெகுதூரம் ஓடி மறைந்தது இரயில். பார்த்துக் கொண்டே நின்றாள் காமாட்சி. அடுத்த இரயில் எப்பொழுது வருமென.

தச்சன் இதழிலிருந்து

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o பழந்தமிழரின் இசைக்கருவிகள்
o அயல் சினிமா: ஆப்பிரிக்காவின் துண்டு வளையல்கள்
o சிறுகதை: பறை
o செம்மொழியை முறையாகக் காப்போம்
o தண்ணீர் தேசம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies