அவன் என் முன்னே வந்து
நிற்பதும் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதும் எனக்குத்
தெரியும். இருந்தும் அவனை ஏறெடுத்துப் பார்க்க விருப்பமின்றி நான் தலை கவிழ்த்து
உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் வெறுமனே மௌனமாய் என் முன் நின்றிருந்தவன் என்
இறுக்கம் பிடிக்காமல் என் முகவாயை தொட்டு தூக்கி என் விழியை ஊடுருவினான். அவனின்
பார்வையில் உரச விருப்பமின்றி நான் என் கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.
என் வீம்பு கண்டு
கலகலவென்று சிரித்தான். எத்தனை நேரம் இப்படி இருக்க உத்தேசம்...? என்று நக்கல்
செய்தான். அவனின் நாராச சிரிப்பும் நக்கல் மொழியும் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
அவன் அங்கு நிற்காது தொலைந்து போக மாட்டானா என்று ஏங்கினேன்.
எட்டிப்போ... உன்னை
பார்க்க கூட எனக்கு விருப்பமில்லை. அப்புறம் தானே உன்னோடு கதைப்பதும் நகைப்பதும்.
உன்னை நான் வெறுக்கிறேன்...
அவன் மீண்டும் சிரிக்கவே
செய்தான்.
எங்கு போவது கணேசா...?
எங்காவது தொலைந்து போ.
நான் காண முடியாத திசைக்கு போ.
அப்படி ஒரு திசை உண்டா
என்ன?
நீ தானே என்னை
உயிர்பித்தாய். பின் உரு ஒன்று கொடுத்தாய். உன்னால் பெறப்பட்டு வளர்க்கப்பட்டவன்
தானே நான். உண்மை இப்படி இருக்கையில் என்னை போ... போ... என்று நீ விரட்டினால் நான்
எப்படி பிரிய முடியும் உன்னை? ஏன் பிரிய வேண்டும் உன்னை?
என்ன...ஏன் பிரிய
வேண்டுமா? உன்னால் தான் எனக்கு துன்பமும், நெஞ்சு விதிர்க்கும் வேதனையும். நீ
இல்லையென்றால் நான் இக்கணம் சுகஜீவிதம் செய்து கொண்டிருப்பேன். ஆனந்தத்தில்
திளைத்திருப்பேன். அப்படி என்னை இருக்கவொட்டாமல் விலங்கிட்டுப் பூட்டி வைத்தது நீ
தானே.
அப்படி என்ன தான்
செய்துவிட்டேன், செய்ய கூடாத ஒன்றை. என்னை இந்த அளவுக்கு நீ வெறுத்தொகுக்குமாறு
குரூபியாய் நான் உன் பார்வையில் மாறி போனது எதனால்?
ஒன்றா... இரண்டா... எதை
சொல்ல, எதை விட? கல்லூரி பருவத்தில் சிகரெட் பிடித்து பார்ப்பது அத்தனை கேடு
கெட்ட ஒன்றா என்ன... நான் என்ன போதைக்கடிமையாய் நித்தம் நித்தம் சொக்கிக் கொண்டா
திரிந்தேன். ஏதோ வாய்க்குள்ளிருந்து பகபகவென புகை வருவதை ஒரு தடவை ஒரே தடவை செய்து
பார்க்க ஆசை கொண்டேன். அதில் யாருக்கு என்ன தீங்கு வந்துவிட்டது. அல்லது நான்
மொடாக்குடியனாகி கை கால் இழுத்துக் கொண்டு திரியுமளவுக்கு ஆடிக்டாகவா ஆகிவிட்டேன்.
ஆனால் நீ அதை சொல்லிக் கொண்டே திரிந்தாய். தவறு என்பதை பாவம் என்பதாய்
பூதாகரமாக்கிச் சித்தரித்து அனுதினமும் தாலி அறுத்தாய்...
ஹேய் அசடு... அது என் தவறா.
பைத்தியக்காரா...இந்த விசயம் பாவம் என்பதான பதிவை நானா உனக்கு கற்பித்தேன் அது
உனக்கு உன் சமூகம் சொல்லி கொடுத்தது.
இங்கு வாழுகிறாயே... இந்த
மனிதர்களும் இந்த சூழ்நிலையும் அந்த தவறை பாவம் என்பதாய் உனக்கு
கற்பித்திருக்கிறார்கள். அந்த பதிவு உன்னைத் துன்புறுத்தியதென்றால், அதற்கு நான்
காரணமல்ல. உன் சமூகம், உன் சூழல். அதற்கு என்னை பலியாக்காதே. சரி... இதை விட்டு
தள்ளு. இது ஒரு பிசாத்து விசயம்.
என்னை ரொம்பவும்
விசனப்படுத்திய ஒன்று அந்த விசாலி விசயம். இள ரத்தம். துடிதுடிக்கும் ஏக்கம்.
பெண்களை ஆவலாய் பார்க்கும் வயது. இதில் காதல் வயப்படுவதென்பது சாதாரண விசயம் தானே.
ஆரம்பத்தில் அதில் நான் கரைய வதம் செய்தாய். சதா அந்த பெண் முகம் என் நெஞ்சில் வந்து
வந்த கிளர்ச்சியூட்ட வைத்தாய்.
அதற்கு நானென்ன செய்ய
முடியும். பையா உனக்கு கழிவில்லை. ஆளுமையில்லை. அந்த பெண்ணின் மனதில் புகுந்து அவளை
உன் பால் இழுக்கும் திராணியில்லை உனக்கு. வலுவான ஆண்மையில்லை. அதான் அவள்
உன்னிலிருந்து விலகி போனாள்.
ஏய்...பிசாசு. நான் நான்
லோபியாகவே இருந்து விட்டு போகிறேன். கையாலாகாத கபோதி... ஆண்மையற்ற பேடி...அது. இது...
என்று எது வேண்டுமானாலும் சொல் எனக்கு கவலையில்லை. என் திராணியின்மையும், அடுத்தவரை
கவரும் திறமையின்மையும் கூட என்னை பெரிதாய் இம்சிக்கவில்லை.
அதனால் அவள் என்னை விட்டு
விலகியது கூட அவளின் உரிமை என்ற ரீதியில் என்னால் புரிந்து கொள்ள கூடியதே. ஆனால் நீ
அதை ஏன் நெடுநாள் மறக்கவொட்டாமல் என்னை சுமந்து கொண்டே திரிய வைத்தாய். சுமார் 2
வருச காலம் நான் துரும்பாய் இளைத்து போனேன் அது உன்னால் தானே. அந்த நினைவு நீர்த்து
போகாமல் உள்ளுக்குள் நிலைக்க வைத்த பாவம் உன்னுடையது தானே.
அது தான் உன்
முதிர்ச்சியின்மை தம்பி. நீ விடலை. அக்மார்க் விடலை. அதற்கு நானெப்படி பொறுப்பாவேன்.
ஆமான்டாப்பா... எதற்கும் நீ பொறுப்பல்ல எல்லாமே நான் தான். நான் தான் தவறு செய்தவன்.
பின்னர் நானா... இது
மட்டுமா சொல்லுவாய். உன் நண்பன் செய்த துரோகத்தை உன்னால் மறக்க முடியாமை. உனக்கு
ஏற்பட்ட அவமானங்களை ஜீரணிக்க இயலாமை... இப்படி வரிசையாய் ஒரு குற்றப் பத்திரிகை
வைத்திருப்பாயே. எல்லாவற்றுக்கு நான் தானா பொறுப்பு...?
சத்தியமாய். சத்தியமாய்
நீ தான். எனக்கு இன்னா செய்தாரை நான் நாணும் படி செய்ய என்றைக்காவது என்னை
பழக்கியிருக்கிறாயா... எப்போதும் வஞ்சகம், துரோகம் பற்றிய நினைப்பு. அவமானங்கள்
பற்றிய துக்கம்... எதை மறக்க வைத்தாய் நீ? மீண்டும் மீண்டும் நினைவூட்டி என்னைப்
பாழாக்கி வைத்திருந்ததே நீ தானே.
அப்போ உன் துக்கங்கள்
எதற்குமே நீ பொறுப்பில்லையா... எல்லாமே நான் தானா... இப்படி அடுத்தவர் மேல் காரி
உமிழும் அற்ப பிறவியாய் நீ ஆகிப் போனது எனக்கு உண்மையிலேயே வருத்தம் தருகிறது கணேசா.
இல்லை. நான் அப்படி
சொல்லவில்லை. என் மேலும் நிறைய தவறுகள் உண்டு. அதை ஏற்று கொள்ளும் பக்குவமும் எனக்கு
உண்டு. என் அம்மாவின் சிதையின் மேல் படுத்து நான் கதறி அழுதேனே... உனக்கு
ஞாபகமிருக்கிறதா...
நான் தான் நீ
பிறந்ததிலிருந்தே உன் கூடவே கும்மியடித்துக் கொண்டிருக்கிறேனே... என்ன சொல்ல
வருகிறாய் சொல்.
என் அம்மாவை சிதையில்
பார்த்த போது நான் தான் அவளுக்கு செய்ய வேண்டிய அனுசரணைகளை செய்யவில்லை என்கிற ஞானம்
வந்தது. அவள் உயிரோடு இருந்த காலத்தில் அவள் சந்தோஷப்படும் படி ஏதும்
செய்ததில்லையே என்கிற ஏக்கம். கண்கெட்ட பிறகு தான் எனக்கு கண்ணில் பட்டது. அவளை
தலையில் வைத்து கொண்டாடவில்லை. கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவள் அவள். நான்
செய்யவில்லை. மரக்கட்டையாய் இருந்திருக்கிறேன்.
என் ஜென்மம் பாழ். அதற்கு
நான் உன்னை காரணமாக்கவில்லையே. இதற்கு முழுமுதற் காரணமும் நான் தான். என் மடப்புத்தி
தான். இன்னமும் சொல்ல போனால் உள்ளுக்குள் அப்பியிருந்த காமம் தான். கண்களையே
திறக்கவிடவில்லையே கடைசி வரை. இதிலும் கூட உனக்கும் துக்கிளியூண்டுப் பங்குண்டு.
மோகத்திலேயே சதா சர்வ காலமும் நிலைக்க செய்து வேறு விசயங்களை சிந்திக்க வொட்டாமல்
இருக்கப் பண்ணியது உன்னை தவிர வேறு யார்? நீ தான்... நீ தான்...
என்ன வாய் மூடி மௌனியாகி
விட்டாய். பேசா மடந்தையாகி விட்டாய். சாட்டை சொடுக்கு வலி தருகிறதோ...
சொல்லு ...சொல்லு ...இன்னும்
என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ சொல்லு. வாய் கூசாமல் சொல்லு.
கெட்ட விசயங்களை விட்டு
தள்ளுப்பா. நல்ல விசயங்களிலாவது என்னை சும்மா விட்டியா நீ. அவற்றிலும் என்னைத்
தொல்லைக்குள்ளாக்குவது தான் உன் தொழிலாப் போய் விட்டது.
சமூகத்தின் ஏற்ற தாழ்வு
கண்டு நெஞ்சு விதிர்க்கிறது. சாக்கடைத் தண்ணீர் தெருவில் ஓடுவது கண்டு வேதனை
பொங்குகிறது. குப்பை மேடு வீடு சுற்றிக் கிடப்பது துக்கம் தருகின்றது. இதையெல்லாம்
கண்டும் காணாது செல்லும் மனிதப் பதர்கள் மீது கோபம் கொப்பளிக்கிறது.
ஹே...ஹே... நிறுத்து
நிறுத்து. என்ன நீ பாட்டுக்கு பினாக்கறே. இதற்கும் எனக்கும் என்னப்பா சம்பந்தம்.
இருக்குடா. இருக்கு
தெருக்குழாய்ல தண்ணி கொட்டி வீணாப் போயிட்டிருந்தா எத்தனை பேரு அதுக்காக
வருத்தப்படறான். அவனவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போயிட்டிருக்கான். எனக்கு
மட்டும்ம அதப் பத்தின கஷ்டம் ஏன்... நீ இருக்கறதால தானே!
ஏமாத்தறதும் லஞ்சம்
வாங்கறதும் அடுத்துக் கொடுக்கறதும் சர்வ சாதாரணமா ஆகிட்டிருக்கிற நிலைல...
ஜனகூட்டம் மொத்தமும் அதை விழுங்கி சந்தோசமா வாழ பழகிக்கற புத்திக்கு
ஆட்பட்டிருக்கிற நிலைல, என்னால அப்படி இருக்க முடியலயே ஏன்? அது மனித குலத்துக்கான
கலாச்சார சீரழிவுன்னு உள்ள கெடந்து துடிக்குதே... ஏன்?
கற்பழிப்பு வெட்டு
குத்துன்னு கேக்க கேக்க என்னால இயல்பா இருக்க முடியலயே... ஏன்? சக மனுசன் மேல
அன்பு இல்லாம அல்லாடற ஜனத்துகிட்ட போய் போய் போய் ஏதோ சொல்ல தோணுதே... ஏன்?
என்னை சகலத்தையும் மூடிக்கிட்டு கெடக்க வுட மாட்டேங்கிறியே ஏன்? நான் இதுக்கெல்லாம்
பெரிசா ஒண்ணும் கிழிச்சிட போறதில்லை. அது எனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் ஏதோ
புடுங்குற மாதிரி கெடந்து அல்லாடறேனே ஏன்?
இந்த பிரம்மாண்டமான
உலகத்துல நா ஒரு தூசுன்னு எனக்கு தெரியாதா என்ன... தூசு தூசாவே இருந்துட்டு
காத்து அடிக்கிற திசையில போயிட வேண்டியது தான. நீ கூடவே இருந்து என்னை கூறு போடறதால
தானே வினை.
யேய்... நான்
எங்குழந்தைக்கு நல் உலகத்தை விட்டுட்டு போலப்பா. நல்ல சூழல விட்டுட்டு போகலை.
எஞ்சுகத்துக்கு ஒரு உசுரை உருவாக்கிட்டு அதை நாயும் நரியும் பேயும் பிசாசும்
எச்சிலொழுகிட்டு நர்த்தனமாடற இடத்துல விட்டுட்டுப் போகப் போறேன். இதுக்கெல்லாம் நா
மாத்திரம் காரணமில்லைன்னாலும் நானும் ஒரு காரணம்னு அடி வயிறு கலங்குது. நான் பாவம்
செய்யறேன். பெரும் பாவிடா நான். இந்த நெனப்பெல்லாம் உன்னால தானடா.
போதும்... போதம்
நிறுத்துடா பைத்தியகாரா. எதுக்கும் ஒரு அளவு இருக்கு. நா யாருன்னு நெனச்ச? எனக்கு
உருவம் கெடையாது. உசுரு கெடையாது. நா ஒரு வஸ்துவும் கெடையாது. உன் எண்ணங்களோடு
தொகுப்பு தான் நான். அந்த தொகுப்பை சிதறடி. இல்ல ஒருமுகப்படுத்து. நான் உன்னை
தொந்தரவே செய்ய மாட்டேன்.
இது இப்படித்தான்...
முதல்ல இதப் புரிஞ்சுக்கோ. மாற்றம்கிறது நல்லதா இருக்கட்டும், கெட்டதா
இருக்கட்டும் எதுவானாலும் ஒரு ராத்திரில வந்துடாது. தனி மனுஷனுக்கே இது
நாளாகும்கிற போது, ஒட்டு மொத்த ஜனக்கூட்டத்துக்கும் ஒரு ராத்திரில வந்துடுமா... பல
வருஷங்களாகணும். இது ஸ்லோ ப்ராஸஸ்.
முதிர்ச்சி வர வரத்தான்
இதுவும் புரியும். புரிய புரிய தான் கொந்தளிப்பு குறையும். அது குறைய குறையத் தான்
நான் இல்லாமல் போவேன். நா இல்லாமப் போகும் போது தான் உனக்கு சந்தோசம். பதப்படுறா
மடையா. பதப்படு.
என்ன எழவோடா. உன்னால
ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். அது மாத்திரம் உண்மை. ஒளவைக் கிழவி வயித்தப் பத்தித்
தான் பாடினா. எனக்கென்னவொ என்னப் பத்தித் தான் முதல்ல பாடிருக்கணும்னு தோணுது
உன்னோட வாழறது ரொம்பக் கஷ்டம்டா சாமி.